ஜோகூர் பாரு:
இங்குள்ள ஜாலான் டத்தோ சுலைமானில் உள்ள ஒரு ஹோட்டலின் மேல் தளத்திலிருந்து விழுந்து 50 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.
11 மணியளவில் ஹோட்டலின் முன்பகுதியில் நபர் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்றும், ஜோகூர் பாரு மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ரவூப் செலாமாட் கூறினார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து குதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலில் சந்தேகத்திற்கிடமான கிரிமினல் காயங்கள் எதுவும் இல்லை. மேலும் உயிரிழந்த அந்த ஆடவர் கடந்த ஒன்பது நாட்களாக அதே ஹோட்டலில் தங்கியிருந்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன.
இந்தச் சம்பவம் தற்போது ‘திடீர் மரணம்’ (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு (Hospital Sultanah Aminah) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் இது குறித்து எந்தவிதமான யூகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் ACP ரவூப் கேட்டுக்கொண்டுள்ளார். மேலதிகத் தகவல்கள் விசாரணைக்குப் பிறகு பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.




