கோலாலம்பூர் | மார்ச் 16, 2026:
ஜோகூரில் உள்ள எஸ்ஸ்டார் விஷன் (Esstar Vision Sdn Bhd) என்ற கட்டுமான மற்றும் சிவில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் மார்ச் 16, 2026 அன்று நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்நிறுவனத்தில் மொத்தம் 169 ஊழியர்கள் (65 உள்ளூர்வாசிகள் மற்றும் 104 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்) பணியாற்றுவது தெரியவந்தது.
செப்டம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. சிலருக்கு செப்டம்பர் மாத ஊதியம் தவணை முறையில் வழங்கப்பட்டுள்ளது. 2025-இல் 29 உள்ளூர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளில் RM263,076.79 நிலுவையில் உள்ளது.
2026-இல் 86 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் 6 உள்ளூர் தொழிலாளர்கள் சார்பில் RM636,414.65 கோரப்பட்டுள்ளது (இதில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தொகை மட்டும் RM578,000).
தீபகற்ப மலேசியா தொழிலாளர் துறை (JTKSM), 1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் 16 விசாரணைக் கோப்புகளைத் திறந்து அமலாக்க நடவடிக்கைகளை மனிதவள அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும் 8 விசாரணைக் கோப்புகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன.
“தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை. தொழிலாளர் சட்டங்களை மீறுவதை எந்தக் காலத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அமைச்சர் ரமணன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
முதலாளிகள் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்துத் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.




