ஜோகூர்:
ஜோகூர் மாநில கல்வித் துறையினர் தமிழ்ப் பள்ளிகளில் உள்ளப் பிரபல தமிழ் கவிஞர் மற்றும் தத்துவஞானியான திருவள்ளுவரின் சிலையை அகற்ற உத்தரவிட்டதற்கு இந்திய சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம், மலேசிய இந்து சங்கம் போன்ற அமைப்புகள் இந்த உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி கல்வி துறையிடம் வலியுறுத்தியுள்ளன. இந்த அமைப்புகள், திருவள்ளுவர் சிலை மத வழிபாட்டுக்கான அல்ல; தமிழ் இலக்கியம், கல்வி மற்றும் நெறிமுறை மதிப்புகளின் அடையாளமாகும் எனக் கூறுகின்றன.
மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு, ஜோகூர் மாநில கல்வித் துறைக்கு அனுப்பிய கடிதத்தில், “திருவள்ளுவர் சிலை சமய வழிபாட்டுக்கான சிலை அல்ல. இது தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளின் உயரிய அடையாளமாக உள்ளது” என்று விளக்கியுள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கூறியதாவது, “திருவள்ளுவர் சிலையை அகற்றுவது தமிழ்ப் பண்பாடு, மொழி மற்றும் சமூக வளர்ச்சியின் அடிப்படை மதிப்புகளை பாதிக்கும். கல்வி அதிகாரிகள் தமிழ்க் கல்வியின் அடையாளங்களை பாதுகாத்து, மாணவர்களின் மனப்பாங்கை வளர்க்கும் சூழலை உறுதி செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.
சமூகத்தினர் மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது பட்ஜெட் உரையில் திருக்குறளை உதாரணமாகக் குறிப்பிட்டிருப்பதை போல், திருவள்ளுவர் படைப்புகள் மலேசிய சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த எதிர்ப்பு தமிழர் கலாச்சார மரபையும், கல்வி உரிமைகளையும் பாதுகாக்கும் பெரும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
The post ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்றும் உத்தரவுக்கு எதிர்ப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

