கோலாலம்பூர்,
ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வரும் புத்ராஜெயாவின் (மடானி அரசாங்கம்) கடப்பாட்டை பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி நேற்று உறுதி செய்தார். இது தலைவர்கள் அல்லது நிர்வாகஸ்தர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இங்குள்ள மேண்டரின் ஒரியண்டல் ஹோட்டலில் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார பங்காளிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் பொருளாதார மண்டலம் யார் வந்தாலும் யார் போனாலும் தொடர்ந்து செயல்படக்கூடிய கொள்கைகள் நிலைத்திருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வர்த்தகப் பேராளர்களிடையே உரையாற்றிய அவர், தமக்குப் பதில் வேறொருவர் இந்தப் பதவியில் நியமனம் செய்யப்படலாம் அல்லது வேறொரு நிர்வாகம் பொறுப்பேற்கும். இதையெல்லாம்விட ஜோகூர் – சிங்கப்பூர் பொருளாதார மண்டலம் மிகப்பெரியது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான ரஃபிஸி, கட்சித் தேர்தலில் அப்பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு மிகக்கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளார். இந்தத் தேர்தலில் தோல்வியுற்றால் தம்முடைய பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
இதனை மனத்தில் வைத்து இந்த வர்த்தகப் பேராளர் கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் எதிர்காலம் குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். வரும் ஆண்டுகளில் அதற்கான முன்னுரிமைகள் தொடரும். ஆக்கப்பூர்வமான மேம்பாடுகளுடன் இந்த மண்டலம் தொடர்ந்து எழுச்சி பெறும். இன்றைய நம்முடைய உழைப்பு அனைத்தும் விரயமாகி விடக்கூடாது என்பதை மட்டும் நாம் உறுதிசெய்ய வேண்டும். இதன் தொடர்பான கொள்கைகள் தொடரும். யார் அரசாங்கம் அமைத்தாலும் இதில் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை. ஒரு தனிநபர் அரசியல்வாதி என்பவர் இதில் முக்கியமல்ல. தற்போது வகுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் கொள்கைகள்தாம் அவசியம் என்பதைத் தாம் உறுதிப்படக்கூறுவதாகச் சொன்னார்.
என்னுடைய காலம் தற்காலிகமானதே. வேறொருவர் புதிய பொருளாதார அமைச்சராக நியமனம் செய்யப்படலாம். ஆனால் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் பல வகைகளில் மிகச் சிறப்பான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் என்ற வாக்குறுதியைத் தம்மால் தர முடியும் என்று ரஃபிஸி கூறினார்.
ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்புக்கு புத்ராஜெயாவும் சிங்கப்பூரும் 2025 ஜனவரியில் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. 11 துறைகளில் முதலீடுகளைக் கவர்வதற்கு இத்திட்டம் இலக்கு வைத்திருக்கிறது. தயாரிப்பு, போக்குவரத்து. உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா, எரிபொருள், டிஜிட்டல் பொருளாதாரம். பொருளாதாரம், நிதிச் சேவைகள், வர்த்தகச் சேவைகள், கல்வி, சுகாதாரம் ஆகியவையே அந்த 11 துறைகளாகும்.
பசுமைப் இந்தப் பொருளாதார மண்டலமானது தென் ஜோகூரில் 3,571 சதுர கிலோ மீட்டர் அளவில் அமைந்திருக்கிறது. ஒரே இடத்தில் பல்வேறு பொருளாதாரத் துறைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு பிரமாண்ட பொருளாதார மண்டலமாக இது திகழும். இதன் நீண்டகால இலக்குகள், வியூக விருப்பங்கள், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை குறித்து அன்வார் நிர்வாகம் ஒரு பெருந்திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் நாட்டின் அடுத்த மிகப்பெரிய பொருளாதார மையமாக உருவாகும். சாத்தியப்பூர்வமான முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு ஓரிட முகப்பிடமாக இந்தப் பொருளாதார மண்டலம் திகழும். இன்றளவில் 6 பிரதான உள்நாட்டு. அனைத்துலக வங்கிகள் முதலீடுகளைக் கவர்வதற்கு மலேசியா பொருளாதார அமைச்சுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன. இதுவரை 2.35 பில்லியன் ரிங்கிட் வரையிலான முதலீட்டு வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன என்று ரஃபிஸி கூறினார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹ ஃபிஸ் காஸி, பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மி பின் டிரோன், ஐஆர்டிஏ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹாஜி முகமட் நூராஸாம் பின் ஹாஜி ஒஸ்மான், துணைத் தலைமைச் செயலாளர்கள், அமைச்சுகள், டத்தோ ஏஜென்சிகளின் இலாகா தலைவர்கள். ஜோகூர் மாநில அரசாங்க உயர் அதிகாரிகள், வங்கிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



