கோலாலம்பூர், ஜனவரி 28:
பெங்கெராங், தாமான் பாயு டாமாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பற்றி எரியும் கரிம மண் தீயை அணைக்க, தீயணைப்புத் துறையின் Mi-17-IV ரக ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. தரைவழி வீரர்கள் செல்ல முடியாத அடர்ந்த பகுதிகளுக்கு வான்வழியாகத் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.
இன்று மதியம் 12.30 மணி முதல் ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டப் பணியில், 21 முறை (Sorties) சுற்றி வந்து மொத்தம் 33,000 லிட்டர் தண்ணீர் தீப்பிடித்த பகுதிகளில் ஊற்றப்பட்டது.
இன்று மாலை மேலும் 50,000 லிட்டர் தண்ணீரை ஊற்றத் தீயணைப்புத் துறை திட்டமிட்டிருந்தது. மேலும் ஒருமுறைக்கு 1,590 லிட்டர் தண்ணீரைச் சுமந்து செல்லும் ‘பாம்பி பக்கெட்’ (Bambi Bucket) முறை பயன்படுத்தப்படுகிறது.
அடர்ந்த புகைமூட்டம் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தாமான் பாயு டாமாய் பல்நோக்கு மண்டபம் மற்றும் எஸ்.கே. சுங்கை கபால் (SK Sungai Kapal) ஆகிய நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் வரை சுமார் 54.8 சதவீத பகுதிகளில் தீ அணைக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் இருந்து வீசும் பலத்த காற்று மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் தீ எரிவது ஹெலிகாப்டர் இயக்கத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது என்று, ஜோகூர் தீயணைப்புத் துறை துணை இயக்குனர் முஹமட் அல் முஸ்தகிம் கூறினார்.
“தற்போது புகைமூட்டம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தப் புகையானது சிங்கப்பூரின் வான் எல்லைக்கு இன்னும் செல்லவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.




