ஜோகூர் பாரு:
ஜோகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் (Forest City) இயங்கி வரும் பிரபல தொழில்நுட்பக் கல்விக்கூடமான ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) வளாகத்திற்கு இஸ்கந்தார் புத்ரி மாநகர சபை (MBIP) உடனடியாகத் தொழிலை நிறுத்துவதற்கான ‘நிறுத்த உத்தரவு’ (Stop-Business Notice) நோட்டீஸை வழங்கியுள்ளது.
அந்த நிறுவனம் தனது வணிக உரிம நிபந்தனைகளையும், வளாகப் பயன்பாட்டு விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறிய குற்றத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி (Datuk Onn Hafiz Ghazi) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், உள்ளூர் அதிகார சபையினர் நடத்திய தீவிரப் புலனாய்விற்குப் பிறகே இந்த அதிரடி அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த நிறுவனம் இரண்டு வெவ்வேறு வளாகங்களில் இயங்கி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது: அதாவது ஒரு வளாகம் முறையான நிர்வாக அலுவலக உரிமத்தைக் கொண்டிருந்த வேளையில், மலேசியக் குடிமகன் ஒருவருக்குச் சொந்தமான மற்றொரு வளாகம் எவ்வித MBIP வணிக உரிமமும் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
நிர்வாக அலுவலகப் பயன்பாட்டிற்காக மட்டுமே உரிமம் பெற்ற வளாகத்தை, முறையான விரிவான விண்ணப்பங்கள் மற்றும் ஒப்புதல்கள் எதையும் பெறாமல், வகுப்பறைகளாகவும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் அந்நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த அடுக்கடுக்கான விதிமுறை மீறல்களைத் தொடர்ந்து, உரிய உரிமம் இன்றி இயங்கிய வளாகத்திற்கு எதிராக IP012N260714001 என்ற எண்ணைக் கொண்ட ‘தொழில் நிறுத்த உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளுக்குப் புறம்பான விளம்பரப் பலகைகளை (Signboards) வைத்திருந்ததற்காக, 1976-ஆம் ஆண்டு உள்ளூர் அரசாங்கச் சட்டத்தின் பிரிவு 107(2)-இன் கீழ் விளம்பர உரிம நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“சட்ட வரம்பிற்குட்பட்ட அனைத்து அம்சங்களையும் இஸ்கந்தார் புத்ரி மாநகர சபை தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கும். நாட்டின் சட்ட திட்டங்களையோ அல்லது உரிம நிபந்தனைகளையோ மீறுவது கண்டறியப்பட்டால், சற்றும் தயக்கமின்றி சட்ட விதிகளின்படி கடுமையான மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி கூறினார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் குடியுரிமைத் தகுதி குறித்துப் பேசிய மந்திரி பெசார், அது முற்றிலும் நாட்டின் உள்துறை அமைச்சின் (Home Ministry) அதிகார வரம்பிற்குட்பட்டது என்று தெளிவுபடுத்தினார். எனவே, இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களின் நிலை குறித்தும், இக்கல்விக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சு விரைவான மற்றும் இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஃபாரஸ்ட் சிட்டியில் இயங்கும் இந்த நெட்வொர்க் ஸ்கூல், நாணய முதலீட்டுச் செயல்பாடுகள் (Currency Investments) என்ற போர்வையில் மலேசியாவில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கத்தை அல்லது நிகழ்ச்சி நிரலை நிலைநாட்டுவதற்கான ஒரு தளமாகச் செயல்பட்டு வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட ஆதாரமற்ற வதந்திகள் மலேசியாவெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



