கோலாலம்பூர்:
ஜோகூர், ஸ்கூடாய் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி செய்யுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
காணாமல் போன சிறுமி நூர்ஹுமைரா ஃபர்ஹானா அப்துல் ரஹ்மான் ஆவாார். இவர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசியாகக் காணப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட பதில் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டண்டன்ட் சைஃபுல்லா ஜெயா @ யஹ்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தெரிவித்த அவர், “சிறுமியின் 60 வயது தந்தை ஆகஸ்ட் 23 அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முந்தைய நாள் மாலை 5.30 மணி அளவில் ஸ்கூடாயில் உள்ள தாமான் பூலாய் உத்தாமாவில் தனது மகளைக் கடைசியாகப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.
காணாமல் போன சிறுமி 158 செ.மீ உயரமும், 65 கிலோ எடையும், நடுத்தரப் பழுப்பு நிறச் சருமமும் கொண்டவர் என்றும், இச்சிறுமி குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக விசாரணை அதிகாரி சார்ஜன்ட் அப்துல் ஹஃபீஸ் அப்துல் லதீப்பை 011-27300764 என்ற எண்ணிலோ, இஸ்கந்தர் புத்ரி மாவட்டக் கட்டுப்பாட்டு மையத்தை 07-5113622 / 07-5114486 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



