ஜோகூர் பாரு:
ஜோகூரில் சட்டபூர்வ அனுமதி இல்லாமல் பணிபுரிந்ததாக நம்பப்படும் 49 சட்டவிரோதக் குடியேறிகள், குடிநுழைவுத் துறையால் நடத்தப்பட்ட 16 அதிரடிச் சோதனைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கை சனிக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 12.10 மணியளவில் தொடங்கியது என்று ஜோகூர் குடிவரவுத் துறை இயக்குநர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் தாருஸ் தெரிவித்தார்.
மொத்தம் 24 அமலாக்கப் பணியாளர்கள் ஜோகூர் ஜெயாவைச் சுற்றியுள்ள கடை வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 16 அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது அந்நி நாட்டவர்கள் அனைவரும் வளாகங்களுக்கு உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் தப்பி ஓடவும், கூரைகளின் மீது ஏறி ஒளியவும் முயன்றனர். இருப்பினும், அவர்கள் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் அடங்குவர். அவர்களுள் மியன்மார் நாட்டு ஆண்கள் – 12, பாகிஸ்தான் ஆண்கள் – 11, வங்காளதேச ஆண்கள் – 8, இந்தோனேசிய ஆண்கள் – 2, மியன்மார் பெண்கள் – 12, இந்தோனேசியப் பெண்கள் – 4 ஆகியோர் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்ததாகவும் சோதனையில் தெரியவந்துள்ளது.
“அவர்கள் அனைவரும் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அனைவரும் செத்தியா ட்ரோபிகா குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.




