சிரம்பான்,
ஜோகூர் மாநிலத்தில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட 6 வயது சிறுவன், இன்று பிற்பகல் நெகிரி செம்பிலான் ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக மீட்கப்பட்டார்.
“இன்று மாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் இருப்பதைப்பற்றி தகவல் கிடைத்தது. முன்னோட்ட விசாரணைகளில், ஜூலை 24ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள Taman Bukit Indah பகுதியில் இந்த சிறுவன் காணாமல் போனதாக முதல் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அகமட் தாஃபிர் முகமட் யூசுப் கூறினார்.
அதே நேரம் மதியம் 12 மணியளவில், சிறுவனின் உயிரிழப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த கைதுதான் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலில் இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a)ன் கீழ் காணாமல் போனவர் வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இது குற்றவியல் சட்டம் 302 பிரிவு கொலையின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இது சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாகும். காவல்துறை மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றது.