உலகளாவிய தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், மக்களின் அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் புதிய நிறுவனங்களின் வருகை போன்றவை நாளுக்கு நாள் மின்சார தேவையை அதிகப்படுத்துகின்றன. இதனை ஈடுசெய்யும் விதமாக இந்தியாவும் பல்வேறு மூலங்களில் இருந்து மின்சார உற்பத்தியை உருவாக்கி வருகுகிறது. அதன்படி, நீர் மின்சக்தி, புதைபடிவ எரிபொருள் மின்சக்தி, காற்றாலை மற்றும் சமீப காலமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சூரிய மின் சக்தி போன்றவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்மூலம், இந்தியாவின் காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தின் உற்பத்தி குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் காற்று மற்றும் சூரிய மின் சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவானது மற்றும் இந்த வரிசையில் ஜெர்மனியை முந்தியது.
உலகளாவிய எரிசக்தி சிந்தனைக் குழுவான எம்பரின் குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூவின் ஆறாவது பதிப்பு, காற்றாலை மற்றும் சூரிய சக்தி இணைந்து கடந்த ஆண்டு உலகளாவிய மின்சாரத்தில் 15 சதவீதத்தை உற்பத்தி செய்ததாகக் கூறியது. இதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாக இருந்தது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட குறைந்த கார்பன் மூலங்கள் இணைந்து, 2024 ஆம் ஆண்டில் உலகின் மின்சாரத்தில் 40.9 சதவீதத்தை வழங்கின என்றும் அறிக்கை கூறுகிறது. 1940 களுக்குப் பிறகு 40 சதவீதத்தை கடப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், மின்சார உற்பத்தியின் சுத்தமான மூலங்கள் 22 சதவீதத்தை கொண்டுள்ளன. இதில், நீர் மின்சாரம் 8 சதவீத பங்களிப்பையும், காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி இணைந்து 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.
இதையும் படிக்க: “வக்ஃப் சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுத்தமான மின்சாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது, 2024 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 858 டெராவாட் மணிநேரம் (TWh) சேர்த்தது. ஆனால், 2022 ஆம் ஆண்டில் சேர்ந்த முந்தைய சாதனையை விட இது 49 சதவீதம் அதிகமாகும்.
சூரிய மின் சக்தி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புதிய மின்சார மூலங்களில் மிகப்பெரிய ஆதாரமாக இருந்து வருகிறது, இது 2024 இல் 474 TWh ஐ சேர்த்தது. அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக 20 வது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் மின்சார மூலமாகவும் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், உலகளாவிய சூரிய மின் சக்தி உற்பத்தி 6.9 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.
இந்தியாவும் சூரிய மின் சக்தியில் விரைவான அதிகரிப்பைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் சூரிய மின் சக்தி 7 சதவீத பங்களிப்பை அளித்தது. இந்த நிலையில், கடந்த 2021 இல் இருந்து தற்போது வரையில் அதன் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது.
இந்தியா 2024 ஆம் ஆண்டில் 24 ஜிகாவாட் (GW) சூரிய மின் சக்தியை உருவக்கியது, இது 2023-ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதன்மூலம், சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியா மூன்றாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. இது உலகளாவிய சூரிய மின் சக்தி உற்பத்தியில் நான்காவது பெரிய அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது, அதாவது, 20 TWh ஐச் சேர்த்தது.
உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கான இயந்திரமாக “சூரிய சக்தி” மாறியுள்ளது என்று எம்பரின் நிர்வாக இயக்குனர் பில் மெக்டொனால்ட் கூறினார். இது, பேட்டரி ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டால், சூரிய மின் சக்தி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் புதிய மின்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரமாக மற்றும் உலகின் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கும்.
2024 ஆம் ஆண்டின் மின்சார உற்பத்தி குறித்த திறந்த தரவுத்தொகுப்புடன் செவ்வாயன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, உலகளாவிய மின்சார தேவையில் 93 சதவீதத்தைக் கொண்ட 88 நாடுகளை உள்ளடக்கியது மற்றும் 215 நாடுகளுக்கான வரலாற்றுத் தரவை உள்ளடக்கியது.
சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளின் சாதனை வளர்ச்சியால், ஆசியாவில் தூய்மையான எரிசக்தி மாற்றம் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக எம்பரின் ஆசிய திட்ட இயக்குனர் ஆதித்யா லோலா கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் தூய்மையான மின்உற்பத்தி, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வேகமாக வளர்வதை உறுதி செய்ய வேண்டும் என்கிற பெரிய சவாலும் உள்ளது.
இந்தியாவை “சூரிய சக்தி” என்று அழைத்த ஐ.நா.வின் காலநிலை மாற்றத் தலைவர் சைமன் ஸ்டீல், பிப்ரவரியில், உலகளாவிய தூய்மையான எரிசக்தி ஏற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று கூறினார்.
2022 ஆம் ஆண்டில் UNFCCC க்கு சமர்ப்பிக்கப்பட்ட அதன் காலநிலை உறுதிமொழிகள் அல்லது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (NDCs) ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து, 50 சதவீதத்தை அடைய இந்தியா இலக்கு வைத்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டில், 2030 ஆம் ஆண்டுக்குள் 500 GW புதைபடிவ எரிபொருள் அல்லாத திறனை அடைவதற்கான இலக்கையும் இந்தியா அறிவித்திருந்தது.
இந்த இலக்கு, இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படவில்லை என்றாலும், 14வது தேசிய மின்சாரத் திட்டம் உட்பட தேசிய எரிசக்தி திட்டமிடல் ஆவணங்களில் இது ஒரு முக்கிய வழிகாட்டு குறிப்பாக உள்ளது.
பிப்ரவரியில் வெளியிடப்பட்ட எம்பரின் அறிக்கை, தற்போதைய நிலைகளிலிருந்து ஆண்டுதோறும் 20 சதவீதம் நிதி அதிகரிக்கப்படாவிட்டால், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா, 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தத் தவறிவிடும் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்க்கது.
April 17, 2025 4:50 PM IST
ஜெர்மனியை பின்னுக்குத்தள்ளி 3ஆவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா – அடுத்த டார்கெட் அமெரிக்கா தான்..!

