ஜெராண்டுட்:
பகாங், ஜெராண்டுட்-தெமெர்லோ சாலையில் இன்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், அதிவேக மோட்டார் சைக்கிளில் சென்ற 44 வயது நபர் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மனைவி படுகாயமடைந்தார்.
ஜெராண்டுட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பர்இன்டெண்டெண்ட் முகமட் அசஹாரி முக்தார் விபத்து குறித்துக் கூறியதாவது: இன்று மாலை 6.25 மணியளவில் ஜாலான் ஜெராண்டுட்-தெமர்லோவின் 13-வது கிலோமீட்டரில், கம்போங் தெபிங் திங்கி அருகே விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்தவர் நூர் ஐசாட் அபு பக்கர் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜெராண்டுட் மருத்துவமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார் என்றும், நூர் ஐசாட் தனது யமஹா MT-09 மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் ஜெராண்டுட்டில் இருந்து தெமெர்லோ நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அதே பாதையில் இடதுபுறமாகச் சென்றுகொண்டிருந்த நிசான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) கார், திடீரென சாலை விதியை மீறி, தடை செய்யப்பட்ட இடத்தில் ‘யு-டர்ன்’ (U-turn) செய்ய முயன்றுள்ளது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த நூர் ஐசாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 44 வயது மனைவி பலத்த காயங்களுடன் ஜெராண்டுட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காரை ஓட்டியவர் 73 வயதுடைய ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். அவர் காயமின்றி தப்பினார். அவரிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் (கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல்) விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பண்டிகைக் காலம் என்பதால் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.




