Tamilnadu
oi-Hema Vandhana
கன்னியாகுமரி: ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.. குடும்பத்தில் பிரச்சினை வந்தால் அதைத் தீர்க்க என்னென்னவோ முயற்சி செய்வார்கள். அந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியொரு அதிர்ச்சிப் புகார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிளம்பியுள்ளது. இதில் பிரதானமாக போலீசாரின் கவனம் திரும்பியிருப்பது நாகர்கோவில் ஷாலினி மீதுதான்.
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மினிஷா. இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வழி தேடிக்கொண்டிருந்த மினிஷா, ஒரு கட்டத்தில் நகைகளை அடகு வைப்பதற்காக நிதி நிறுவனம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

நாகர்கோவில் ஷாலினி
அந்த பைனான்ஸ் கம்பெனியில் ஒரு பெண் மினிஷாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். மேக்கோடு பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றால் குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அந்தப் பெண் மினிஷாவிடம் ஆலோசனை சொன்னதாக தெரிகிறது…
குடும்பத்தில் நிம்மதி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் மினிஷாவும் இதை நம்பி அந்தக் கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கே ஷாலினி என்ற பெண் சாமியார், மினிஷாவிடம் அணுகி, தாலி, திருமணப் புடவையை தந்தால், குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக சொல்லியிருக்கிறார்.. அதாவது, மினிஷாவின் திருமணப் புடவை, தாலி சரடு, கொலுசு உள்ளிட்ட நகைகளை தந்தால், அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றாராம்..
பெண் சாமியார் மிரட்டல்
அப்படி செய்யாவிட்டால், மினிஷாவின் தம்பியின் குழந்தை இறந்துவிடும் என்றும், மினிஷாவின் அப்பா உயிருக்கு ஆபத்து என்றும் அச்சுறுத்தியதாக தெரிகிறது.. ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சினை இருந்த நிலையில், இதைக்கேட்டு பதறிப்போனார் மினிஷா..
இதையடுத்து, பெண் சாமியாரும் அவருடன் இருந்தவர்களும் சேர்ந்து, விரைவில் குடும்ப பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, மினிஷாவிடம் இருந்து சுமார் ரூ.50 லட்சம் பணத்தையும் 25 சவரன் தங்க நகைகளையும் பெற்றுள்ளனர்.. ஆனால், பிரச்சினையை தீர்க்காமல் காலம் ஷாலினி தாழ்த்தி வந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மினிஷா, தான் கொடுத்த பணத்தையும் நகைகளையும் திரும்பக் கேட்டுள்ளார்.
ரத்தம் கக்கி இறந்துடுவாய்
அதற்கு ஷாலினி, பணம், நகைகளைத் திருப்பிக் கேட்டால் ரத்தம் கக்கி இறந்துவிடுவாய் என்று மினிஷாவை மிரட்டினாராம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷாலினி, இனியும் அமைதியாக இருந்தால் பணமும் நகைகளும் கிடைக்காது என்று முடிவெடுத்து நாகர்கோவில் எஸ்பி ஆபீசில் புகார் தந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, “என்னிடம் இருந்து பெறப்பட்ட பணம், நகைகளை மீட்டுத் தர வேண்டும்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்னை போலவே பலரிடமும் இதே முறையில் பணம், நகைகளை ஷாலினி பெற்று ஏமாற்றப்பட்டிருக்கலாம்.. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தின் காரணமாக வெளியே வந்து புகார் அளிக்காமல் உள்ளதாக தெரிகிறது.. அதனால் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் வினிஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க வழி தேடுபவர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பணம், நகைகளை பறிக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மினிஷா அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை தெரியவர வேண்டியுள்ளது…!!!


