ஜூலை 31-க்குள் ITR தாக்கல் செஞ்சிடுங்க! இல்லன்னா ரூ.5000 ஃபைன் + 1% வட்டி! யாருக்கு எவ்வளவு தெரியுமா?
ஜூலை 31ஆம் தேதி வரி செலுத்துவோருக்கு மிக முக்கியமான நாள். ஏனெனில் இதுதான் தனிநபர்கள் ITR தாக்கல் செய்வதற்கான டெட்லைன் தேதி. இந்தத் தேதியை தவறவிட்டால் அதன் பிறகும் ITR தாக்கல் செய்யலாம். ஆனால் தாமதமாக தாக்கல் செய்வதற்காக வரியுடன் சேர்த்து தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டி வரும். இதை பிலேட்டட் ரிட்டன் என்று கூறுவார்கள். தாமதமாக வரித் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவை தவறவிடுபவர்களுக்கு வரி பாக்கி நிலுவையில் இருந்தால் அதற்கான வட்டியும் சேர்த்து விதிக்கப்படும். இந்தப் பதிவில் யாருக்கு எவ்வளவு கட்டணம் என்பதைப் பார்ப்போம்.
வருமான வரிச் சட்டம் பிரிவு 234F-இன் கீழ் தனி நபர்கள் காலக்கெடுவைத் தவறவிட்டு ரிட்டன் தாக்கல் செய்தால் தாமதத்திற்கான கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் 2026-ஆம் நிதியாண்டுக்கு ITR தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31. இந்தத் தேதியைத் தவறவிட்டால் டிசம்பர் 31 வரை தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்கு தாமதக் கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக உங்களுடைய வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அதற்கு ரூ.5000 கட்டணம் விதிக்கப்படும். அதுவே உங்கள் மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்திற்குள் இருந்தால் 1,000 ரூபாய் வசூலிக்கப்படும்.

யார் வட்டி செலுத்த வேண்டும்?: காலக்கெடுவைத் தவறவிடும் தனிநபர்களுக்கு வரி பாக்கி இருந்தால் அவர்கள் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டி வரும். வருமான வரிச் சட்டம் பிரிவு 234A-ன் கீழ் வரி தொகைக்கு ஏற்ப மாதத்திற்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி விதிக்கப்படும். இந்த வட்டி எந்த நிதியாண்டில் அவர்களுக்கு வரி பாக்கி இருந்ததோ அந்த நிதியாண்டில் ITR தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதியிலிருந்து கணக்கிடப்படும்.
ஒரு சில வரி செலுத்துபவர்கள் தாமதமாக வரித் தாக்கல் செய்தாலே வட்டி விதிக்கப்படும் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வரி பாக்கி இருந்தால் மட்டுமே வரி விதிக்கப்படும். தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு தாமத கட்டணம் விதிக்கப்படும்.
தொடர்ந்து ITR தாக்கல் செய்யாமல் இருந்தால் என்ன நடக்கும்?: தனிநபர்கள் தொடர்ந்து வருமான வரி தாக்கல் செய்வதை தவிர்த்துக் கொண்டே வந்தால் வருமானவரித்துறை முதலில் நோட்டீஸ் அனுப்பி வைக்கும். நோட்டீஸ் பெறப்பட்ட பிறகும் வரி பாக்கியை செலுத்த தவறும் பட்சத்தில், அதிகாரிகள் அந்த நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கையை எடுப்பார்கள்.
கிளியர் டேக்ஸ் அறிக்கையின் படி, வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. வருமானவரித்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை அதிகமாக இருந்தால் சிறை தண்டனை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கபடவும் வாய்ப்புள்ளது. எனவே ரீபண்ட் பெற இருப்பவர்கள் காலக்கெடுவுக்கு முன் தாக்கல் செய்வது விரைவாக ரீஃபண்ட் தொகையை பெற உதவியதாக இருக்கும்.

