நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜூலை 29-ல் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில் வணிகக் கப்பல் மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா போன்ற 8 மசோதாக்கள் நிறைவேற்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மழைக்கால கூட்டத்தொடரில் முதன்மையாக பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு, ஆபரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், அவையைப் புறக்கணித்து தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

