Last Updated:
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட்டில் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் வரும் 19-ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AXIOM 04 திட்டத்தின் படி, ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் கடந்த 11-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுபான்ஷூ சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள் பயணிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது, திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 19-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் நாசாவின் கென்னடி ஸ்பேஸ் மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தி இந்த தேதியை இறுதி செய்துள்ளனர். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவுத் திட்டத்திற்கு சுக்லாவின் விண்வெளி பயணம் முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இந்தியாவின் 7 ஆராய்ச்சிகளை சுக்லா மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாசாவுடன் இணைந்து பல ஆய்வுகளையும் அவர் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
June 14, 2025 7:20 PM IST


