புதுடெல்லி: எச்எஸ்பிசி இந்திய சேவைகள் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீடு கடந்த மே மாதத்தில் 58.8-ஆக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 60.4-ஆக அதிகரித்துள்ளது. புதிய வணிகங்களுக்கான ஆர்டர் கணிசமாக அதிகரித்ததால் இந்த குறியீடு ஏற்றம் கண்டுள்ளது.
பர்சேசிங் மேனேஜர்ஸ் இன் டெக்ஸ் (பிஎம்ஐ) குறியீடு 50-க்கு மேல் இருந்தால் அது விரிவாக்கத்தையும். அதேநேரத்தில் 50-க்கு கீழ் இருந்தால் பின்னடைவையும் குறிப்பதாகும்.
இதுகுறித்து எச்எஸ்பிசி-யின் தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறுகையில், “புதிய உள்நாட்டு ஆர்டர்கள் வரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஒப்பீட்டு அளவில் தற்போது உள்ளீட்டு செலவினங்கள் குறைந்து நிறுவனங்களின் லாபவரம்பு மேம்பட வழிவகுத்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் சேவைகள் துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. அதேபோன்று வேலைவாய்ப்பும் தொடர்ந்து 37-வது மாதமாக உயர்ந்தது. இவை சேவை துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.