Last Updated:
இந்த ஐபிஓ ரிலையன்ஸின் டிஜிட்டல் வணிகத்தின் சந்தை மதிப்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (IPO), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) நிறுவனத்தின் நிதி நெகிழ்வுத்தன்மையை (Financial Flexibility) கணிசமாக அதிகரிக்கும் என்றும், கடன் சேவைக்கான வட்டிச் செலவுகளைக் குறைக்கும் என்றும் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ் ரேட்டிங்ஸ் (Moody’s Ratings) தெரிவித்துள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம், தனது ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயித்து, சுமார் ரூ.30,213 கோடி திரட்டும் நோக்கில் இந்த ஐபிஓ-வை வெளியிட்டுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியில் ரூ. 27,500 கோடி வரை, ஜியோவின் முழுமையான தொலைத்தொடர்பு துணை நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்’ நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று ‘கிரெடிட்சைட்ஸ்’ (CreditSights) நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகை எதிர்கால வளர்ச்சி, மூலதனச் செலவுகள் மற்றும் வேலை மூலதனத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
மூடீஸ் இதுகுறித்துக் கூறுகையில், “இந்த நிதி திரட்டல் மூலம் பெறப்படும் தொகையானது ரிலையன்ஸின் ஒட்டுமொத்தக் கடனையும், அதற்கான வட்டிச் சுமைகளையும் கணிசமாகக் குறைக்கும். இதன் மூலம், நிறுவனத்தின் கடன் அளவை உயர்த்தாமலேயே ஜியோவின் தொலைத்தொடர்பு நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் திறன் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது.
இந்த பங்குப் பட்டியலிடுதல் மூலமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளில் இருந்து நேரடியாக நிதியைத் திரட்டும் வாய்ப்பைப் பெறும். மேலும், எதிர்கால முதலீடுகள், கையகப்படுத்துதல்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்புகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
மார்ச் 31 நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.5 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் குறுகிய கால முதலீடுகள் கைவசம் உள்ளன. அதேசமயம், குறுகிய கால கடன்கள் ரூ.1.1 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன்-ஈபிடிடிஏ விகிதம் (Net Debt-to-EBITDA ratio) 1.0 முதல் 1.2 மடங்காகவே மிகக் பாதுகாப்பான அளவில் இருக்கும் என்று மூடீஸ் கணித்துள்ளது.
தற்போது 52.4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோ, அடுத்தகட்டமாக செயற்கை நுண்ணறிவு (AI), 5G மொபைல் நெட்வொர்க், ஹோம் அண்ட் சேட்டிலைட் பிராட்பேண்ட் மற்றும் எண்டர்பிரைஸ் கிளவுட் சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஐபிஓ ரிலையன்ஸின் டிஜிட்டல் வணிகத்தின் சந்தை மதிப்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேலும் அதிகரிக்கும்.

