Last Updated:
ஜியோஸ்டார் ஐபிஎல் தொடரால் ரூ.11,222 கோடி வருவாய் ஈட்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் 6% உயர்ந்து ரூ.2,73,000 கோடி. ஜியோ ஹாட்ஸ்டார் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தாண்டியது.
ஜியோஸ்டார், ஐபிஎல் தொடர் காரணமாக கடந்த காலாண்டில் 11 ஆயிரத்து 222 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு அறிக்கையின்படி, முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ஆறு சதவீதம் உயர்ந்து இரண்டு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஐபிஎல் சீசனின் போது தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் முழுவதும் ஆயிரத்து 190 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. OTT தளத்தில் ஐபிஎல்லின் போது 28 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களையும், தொலைக்காட்சியில் 80 கோடிக்கும் அதிகமான மக்களையும் சென்றடைந்துள்ளது.
மேலும், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வருவாய் 11.3 சதவீதம் அதிகரித்து 84,171 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஜியோ ஏர்ஃபைபர் 74 லட்சம் சந்தாதாரர்களுடன் உலகின் மிகப்பெரிய சேவை வழங்குநராக உருவெடுத்துள்ளது. ஜியோ 20 கோடி 5ஜி சந்தாதாரர்களைக் கடந்திருப்பதாகவும், 2 கோடி வீட்டு இணைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மளிகை, ஃபேஷன் உள்ளிட்ட அனைத்து சந்தைகளிலும் முன்னணி செயல்திறனுடன் சிறப்பாக செயல்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால், கெமிக்கல்ஸ் துறையின் வருவாய் 1.3 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, OTT பிளாட்ஃபார்ம்களில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மட்டுமே முன்னிலை வகித்த நிலையில், தற்போது 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தாண்டி, உலகளாவிய OTT சந்தையில் ஜியோ ஹாட்ஸ்டார் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை அதிகாரப்பூர்வமாக இணைந்ததைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14, 2025 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் OTT பிளாட்ஃபார்ம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் காரணமாக தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே ஜியோ ஹாட்ஸ்டார் சுமார் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 19, 2025 12:19 PM IST