[ad_1]
விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய பிரட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இதேபோல, மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான், மேப், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, வெண்ணெய், நெய், சாஸ், சாக்லெட், பிஸ்கெட், உலர் பழங்கள், மார்பிள், பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி பல்வேறு விதமாக இருந்த நிலையில், அவை 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
ஏசி, 32 அங்குல தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், 350 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சிமெண்ட், பேருந்து, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை 28 விழுக்காடு வரியில் இருந்து 18 விழுக்காடு வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள், தனிநபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஆடம்பரப் பொருட்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையால் குடிமக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும் சிறு வணிகர்கள் வணிகம் செய்வது எளிதாகும் என்றும் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
September 04, 2025 6:43 AM IST