ஜார்ஜ் டவுன்:
பினாங்கு, ஜாலான் பந்தாய் ஜெரஜாக் பகுதியில் உள்ள 10 மீட்டர் ஆழமான வடிகால் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (செப்டம்பர் 13) அதிகாலை 2.34 மணியளவில் சடலத்தை மேலே மீட்டுத் தருமாறு காவல் துறையிடமிருந்து உதவிக்கான அழைப்பு வந்ததாகப் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அழைப்பைப் பெற்ற உடனடியாக, பாயான் பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள், ஒரு ஃபயர் ரெஸ்க்யூ டெண்டர் (FRT) மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வடிகாலின் அடியில் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலம், தீயணைப்பு வீரர்களின் போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை 3.15 மணியளவில் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டு மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றது.
மீட்கப்பட்ட சடலம் உடனடியாகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர் யார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது ஏதேனும் குற்றச் செயல் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



