டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது. விசாரணைகளுக்கு பிறகு கடந்த மாதம் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இம்மாதம் 10-ம் தேதி இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் வழங்கியதோடு மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறை செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இன்னும் ஒருசில நாட்களில் ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது எடை மிகவும் குறைந்துள்ளது. ஒருவருக்கு எந்தவித காரணமும் இல்லாமல் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைந்தால் அது தீவிர பிரச்சினை. எனவே, மருத்துவர்கள் எனக்கு பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரை செய்துள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் செய்தால்தான், உள்ளே ஏதாவது தீவிர நோய் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். அதனால் 7 நாட்கள் அவகாசம் கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.
அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இடைக்கால ஜாமீன் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அதற்கான விளக்கமாக, “அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளிவைத்துள்ளது. இந்த முக்கிய மனுவுடன் இடைக்கால ஜாமீன் மனு எந்த விதத்திலும் தொடர்பு உடையது அல்ல எனத் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்கிறார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
