Last Updated:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அலுவா அதுல். பிரபல ரவுடி கும்பலின் தலைவனான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கேரளாவில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடியை பட்டப்பகலில் காரை வழிமறித்து, பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்திவந்த பிரபல ரவுடியின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? காரை வழிமறித்து பழிக்குப் பழியாக பிரபல ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொல்லும் கொடூர காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜாமீன் கையெழுத்திட்டு காரில் சென்றுகொண்டிருந்த ரவுடியை கட்டம் கட்டி தூக்கியவர்கள் யார்? நடந்தது என்ன?
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அலுவா அதுல். பிரபல ரவுடி கும்பலின் தலைவனான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து என ரவுடியிசம் செய்து அச்சுறுத்திவந்த அலுவா அதுல், கடந்த மார்ச் 2025ஆம் ஆண்டு தனது எதிரியான ஜிம் சந்தோஷ் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வழக்கம்போல காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, காரில் புறப்பட்ட அலுவா அதுலை, மற்றொரு கும்பல் காரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கருநாகப்பள்ளி பெட்ரோல் பங்க் எதிரே அதுலின் காரில் மோதி, சாலை நடுவே உள்ள பள்ளத்தில் தள்ளிய கும்பல், காரில் இருந்து பட்டாக்கத்தியுடன் கீழிறங்கி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். தனியாக சிக்கிய அதுலை 4 பேர் கொண்ட கும்பல் கண்டம் துண்டமாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொடூர கொலையைக் கண்டு, சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தின் கொடூரக் காட்சிகள் பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
கேரளாவை உலுக்கிய இக்கொலையில் போலீசார் வழக்குப் பதிந்து கொலையில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதுலால் கொலை செய்யப்பட்ட ஜிம் சந்தோஷின் கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. அவரை காவல் நிலையத்தில் இருந்து ஃபாலோ செய்து வந்து, திட்டமிட்டபடி பழிக்குப் பழியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
இருப்பினும், கொலையாளிகள் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான உண்மை பின்னணி என்ன? என்பது குறித்தும், கொலைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்தும் தெரியவரும்.
Mar 14, 2026 10:23 PM IST
ஜாமினில் வெளிவந்த ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்… தொடரும் பழிக்குப்பழி கொலைகள்…


