Last Updated:
ரஜவுரி, பூஞ்ச், கார்கில் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பல பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் எதிரொலியாக, ரஜவுரி, பூஞ்ச், கார்கில் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கார்கில் பகுதியில் ஜீப்புகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் சுருட்டிச் செல்லப்பட்டன. மெந்தர் பகுதியில் கடுமையான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
ரஜவுரி – தனமண்டி சாலை பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. ரஜவுரி (Rajouri) மாவட்டத்தின் நவுஷேரா பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை ராணுவ வீரர்கள் மீட்டனர். பூஞ்ச் மாவட்டத்தின் பக்யால் தரா நல்லா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளநீர் சூழந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதேபோல, இமாச்சலப்பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய இளைஞர்கள், வெளியேற முடியாமல் தவித்தனர்.
இமாச்சலில் உள்ள பாங்கி பள்ளத்தாக்கில் வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்த கனமழையால் பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.அசாமின் ஜோர்ஹாட் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் – முசோரி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முடங்கியது. இதேபோல, கேதார்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் மழையால் இங்குள்ள அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் அபாய அளவை எட்டியுள்ளன. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்திலும் பரவலாக கனமழை தொடர்ந்தது. தலைநகர் கொல்கத்தா வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில அரசுகளுக்கு உதவ தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
Jammu and Kashmir


