Last Updated:
ஜப்பான் மட்டுமல்லாது இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மனி போன்ற நாடுகளும் மக்கள் தொகை மூப்படைதல் சவாலைச் சந்தித்து வருகின்றன.
ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேவேளையில், பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன.
ஜப்பான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டில் 100 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 107,677 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டை விட 7,914 அதிகமாகும். தொடர்ந்து 56-வது ஆண்டாக இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் 88 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். மருத்துவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவையே ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
இருப்பினும், இந்த நீண்ட ஆயுள் சாதனையின் பின்னணியில் ஜப்பான் ஒரு கடுமையான மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களாக உள்ளனர். இது வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் 40 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜப்பானின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்குச் சராசரியாக 1.14 குழந்தைகள் மட்டுமே பிறப்பதாகக் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த பிறப்பு விகிதச் சரிவு மற்றும் முதியோர் அதிகரிப்பால், உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் ஓய்வூதியம், மருத்துவச் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கான நிதிச் சுமை, சுருங்கி வரும் இளம் தலைமுறையினரின் தோள்களில் விழுகிறது. கட்டுமானம், விவசாயம், போக்குவரத்து மற்றும் சமூகப் பராமரிப்புத் துறைகளில் ஏற்கனவே கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
அரசு சார்பில் குழந்தைகள் வளர்ப்புக்கான மானியங்கள், பெற்றோர் விடுமுறைச் சலுகைகள் எனப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பிறப்பு விகிதத்தை உயர்த்த முடியவில்லை. குறைந்த ஊதியம், வேலைவாய்ப்பின்மை, திருமணம் செய்துகொள்ளும் ஆர்வம் குறைதல் மற்றும் வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டிலும் சரியான ஒத்துழைப்பு கிடைக்காதது போன்றவை இளைஞர்கள் குடும்ப வாழ்க்கையைத் தவிர்ப்பதற்கான முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ஜப்பான் மட்டுமல்லாது இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மனி போன்ற நாடுகளும் மக்கள் தொகை மூப்படைதல் சவாலைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச அளவில் மக்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ள போதிலும், ஜப்பானைப் பொறுத்தவரை இது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

