ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் தோன்றும் வகையிலான போலி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப காணொளிகள் இணையத்தில் உலா வருவது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆழ்ந்த போலிக் காணொளிகள் நிதி மோசடிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பொதுமக்களை பணத்தை முதலீடு செய்ய ஊக்குவிப்பது போன்றும், அதற்குப் பதிலாக அதிக லாபம் தருவதாக உறுதியளிப்பது போன்றும் இந்த காணொளிகளில் போலியாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
மோசடி முதலீட்டுத் திட்டங்கள்
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின்படி, இந்த ஏமாற்று காணொளிகளில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற முக்கிய ஆளுமைகளின் உருவங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இத்தகைய மோசடி முதலீட்டுத் திட்டங்கள் தவிர, வேலை வாய்ப்புகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் இதே போன்ற AI தொழில்நுட்ப காணொளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எச்சரிக்கை
இந்த காணொளிகளில் பெரும்பாலும் பார்வையாளர்களை ஏமாற்று இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லும் லிங்க்குகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவை தனிப்பட்ட தரவுகளையும் பணத்தையும் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் SLCERT எச்சரித்துள்ளது.

இணையப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான லிங்க்குகளைப் பின்தொடர வேண்டாம் என்றும், தங்களின் முக்கியமான தனிப்பட்ட விபரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நுகர்வோர் அனைவரும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, இத்தகைய போலித் தகவல்கள் மற்றும் நிகழ்நிலை மோசடித் திட்டங்களுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

