ஜனாதிபதி சட்டத்தரணிகள் (President’s Counsel) நியமனத்திற்கான வழிகாட்டல்களைத் திருத்தி அமைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய திருத்தப்பட்ட வழிகாட்டல்களின்படி, உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக (Attorney-at-Law) குறைந்தது 20 ஆண்டுகள் தொழில்முறை அனுபவத்தைப் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இனி ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதி பெறுவார்கள்.
ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த புதிய திருத்தத்தின் மூலம், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணப்பட்ட சில விசேட விதிவிலக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முந்தைய வழிகாட்டல்களின் கீழ், உயர் நீதிமன்றச் சட்டத்தரணியாக 20 ஆண்டுகள் அனுபவம் பெற வேண்டும் என்ற பொதுவான விதி இருந்தபோதிலும், அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்யும் 15 ஆண்டுகள் அனுபவமுள்ள சட்டத்தரணிகளுக்குச் சிறப்பு நேர்வுகளில் (Special Cases) விதிவிலக்கு அளிக்கும் சட்ட ஏற்பாடுகள் இருந்தன.

தற்போது அந்த ஏற்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடைமுறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தகுதியுடைய சட்டத்தரணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
