எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வரலாறு காணாத 336 ரன்கள் வித்தியாச தோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த குறைபாடுகளை அலசாத இங்கிலாந்து ஊடகங்கள் பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் ஃபார்ம் தடுமாற்றத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அலசித் தீர்க்கின்றன.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் சிராஜின் அட்டகாசமான எகிறு பந்தில் கோல்டன் டக் ஆனார். ஸ்டோக்ஸ் வாழ்க்கையில் இதுதான் அவரது முதல் கோல்டன் டக். ஸ்டோக்ஸ் மட்டுமா பிரச்சினை 6 இங்கிலாந்து வீரர்கள் டக் அவுட் ஆகினர். ஹாரிபுரூக் 158, ஜேமி ஸ்மித் அதிரடி 184 இங்கிலாந்தைத் தேற்றியது.
2வது இன்னிங்ஸிலும் ஸ்டோக்ஸ் சரியாக ஆடாமல் 73 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தரின் அட்டகாசமான ஒரு பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். அதுவும் உணவு இடைவேளைக்கு முன்னதாக வீசப்பட்ட கடைசி ஓவரில் இது நடந்தது. இது என்னவென்றால் ஒரு அசாத்தியமான புத்திசாலித்தனத்தினால் விழுந்த விக்கெட் ஆகும்.
இதற்கு முந்தைய ஓவரை ஜடேஜா 90 விநாடிகளில் வெகுவிரைவில் வீசி அசத்த உணவு இடைவேளைக்கு முன்பு ஒரு ஓவர் வீசலாம் என்ற கால அவகாசம் ஏற்பட்டது. சுந்தர் அந்த ஓவரில்தான் ஸ்டோக்ஸை உள்ளே செலுத்திய ஒரு பந்தில் எல்.பி.ஆக்கினார். ஸ்டோக்ஸ் சதம் எடுத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாஸ்பால் என்று பெருமை பேச்செல்லாம் கடந்த ஆஷஸ், இந்திய தொடர்களிலேயே காலியாகிவிட்டது. தன் 13 சதங்களுக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் 886 ரன்களையே எடுத்துள்ளார் இதில் 7 அரைசதங்கள் மட்டுமே எடுத்தார்.
ஃபார்முக்குத் திண்டாடிக் கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸைத்தான் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் இங்கிலாந்தின் ஆகச்சிறந்த கேப்டன், பாஸ்பால் தத்துவத்தின் செயல்முறை வடிவம் என்றெல்லாம் ஆச்சா போச்சா என்று புகழ்ந்திருந்தார்,
ஹார்மிசன் புகழ்ச்சிக்குப் பிறகே ஸ்டோக்ஸின் ஸ்கோர் 20, 33, 0, 33. பாஸ்பால் என்கின்றனர், ஆனால் ஸ்டோக்சின் ஸ்ட்ரைக் ரேட் இப்போதைய இந்தியத் தொடரில் 48 தான். மாறாக ஷுப்மன் கில் இந்தத் தொடரில் 580 ரன்களுக்கும் மேல் எடுத்து விட்டார். ஒரு தொடரில் இரு கேப்டன்களுக்கு இடையில் டெஸ்ட் வரலாற்றில் இத்தகைய இடைவெளி இருந்ததில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.
கடுமையான பேட்டிங் பிட்சைப் போட்டு லீட்சை போலவே லக்கில் ஜெயித்து விடலாம் என்று மனக்கோட்டை எட்ஜ்பாஸ்டன் மட்டைப் பிட்சில் இடிந்து விழுந்தது, ஆனால் பென் ஸ்டோக்ஸ், ‘துணைக்கண்ட, இந்தியா பிட்ச் போலவே இருந்ததால் இந்திய பவுலர்களுக்கு பொருத்தமாக இருந்தது’ என்று ஒன்றைக் கூறி கடும் கிண்டலுக்கு ஆளானார். இதே ஸ்டோக்ஸ் ஆஷஷ் 2023-ல் என்ன சொன்னார், எங்களுக்கு ரன்கள் விரைவாக ஸ்கோர் செய்யும் வண்ணம் மட்டைப் பிட்ச்தான் வேண்டும்’ என்றார்.
ஆனால் ஸ்டோக்ஸுக்கு ஸ்பின் ஒரு பிரச்சினையாக இருந்து வருவதுதான் உண்மை. கடந்த ஆண்டிலிருந்து 25 டெஸ்ட் அவுட்களில் ஸ்டோக்சின் 16 அவுட்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான்.
இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப், பென் ஸ்டோக்சை கடுமையாக விமர்சித்துள்ளார், “கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மீது இருக்கும் அதிபுகழ்ச்சியை புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அவர் மோசமான கேட்பன் என்பதை சூசகமாகத் தெரிவித்தார். முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்றது, ஆனால் ஸ்டோக்ஸ் பேட்டிங் அதில் ஒன்றுமில்லை” என்று விமர்சித்திருந்தார்.
இங்கிலாந்து ஊடகங்களும் ஸ்டோக்ஸ் மீது விமர்சனங்களை அள்ளித் தெளித்து வருகின்றன, விக்கெட் கீப்பர்/அதிரடி பேட்டர் ஜேமி ஸ்மித்தை விரைவில் கேப்டனாக்கலாம் என்ற பரிந்துரைகளும் எழுந்து வருகின்றன.