கோலாலம்பூர்:
கிள்ளான், ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே இருந்த சோபாவில் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றுக் காலை 11 மணியளவில் உள்ளூர் நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்றும் வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
அந்தப் பிஞ்சு குழந்தை மேலதிக சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) சிறப்பு பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பாக தண்டனைச் சட்டம் பிரிவு 317-ன் கீழ் (குழந்தையைக் கைவிடுதல்) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது சாட்சிகள் உடனடியாக வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-32912222 என்ற எண்ணிலோ அல்லது இன்ஸ்பெக்டர் முகமட் கைரோலசுவானை 011-16937331 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




