Last Updated:
நேஷனல் ஹெரால்டு மோசடியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 6 பேருக்கு டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளது.
நேஷனல் ஹெரால்டு மோசடி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் நொடிந்த நிலையில், இருந்த போது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட ’யங் இந்தியா’ நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 90 கோடி ரூபாய் கடனை அடைத்து அதன் இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு நிதி மோசடி தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட 6 பேர் மீது டெல்லி காவல்துறை புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த ஆவணங்கள் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனப் பங்குகளை யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி அந்நிறுவன அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார்களா என்பது குறித்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
November 30, 2025 11:49 AM IST


