Last Updated:
அமெரிக்க சுதந்திர தினத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி சீர்திருத்த மசோதாவில் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி, அந்நாட்டின் அழகிய பெரிய மசோதா என்று புகழப்பட்ட வரி சீர்திருத்த மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் வரிச் சலுகை மற்றும் நாட்டின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அதில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 1 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம், செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்பு, மருத்துவக் காப்பீட்டுக்கான நிதி குறைப்பு ஆகியவை அந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தன. மேலும் ராணுவம், சட்டவிரோத குடியேற்றங்களை கண்காணிக்கும் ICE ஆகிய துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை அழகிய பெரிய மசோதா என்று டிரம்ப் புகழ்ந்த நிலையில், எலான் மஸ்க் மட்டுமின்றி டிரம்பின் குடியரசுக் கட்சியினரே இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், அந்நாட்டின் மேலவையான செனட் சபையிலும், கீழவையான பிரதிநிதிகள் சபையிலும் மசோதா இந்த வாரத்தில் நிறைவேறியது.
இந்நிலையில், அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி, மசோதாவில் டிரம்ப் உற்சாகத்துடன் கையெழுத்திட்டு சட்டமானதாக அறிவித்தார். தான் நிர்ணயித்தபடியே, ஜூலை 4ஆம் தேதிக்குள் வரி சீர்திருத்த மசோதாவை சட்டமாக்கியது டிரம்பின் வெற்றியாக கருதப்படுகிறது. மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்ட வீடியோவை பகிர்ந்துள்ள வெள்ளை மாளிகை, வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
July 05, 2025 10:46 AM IST
அமெரிக்காவில் வரிச் சலுகை மற்றும் கடன் உச்சவரம்பு மசோதா – உற்சாகமாக கையெழுத்திட்ட டிரம்ப்