Last Updated:
2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட குடியிருப்பு நெருக்கடியையும் அவர் குறிப்பிட்டார். அங்கு 2007 மற்றும் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து விலைகள் 19 சதவீதம் சரிந்தன.
பெரும்பாலான இந்தியர்கள் நகரத்திலோ அல்லது கிராமத்திலோ சொத்து வாங்குவதைத்தான் முக்கியமான முதலீடாக கருதுகிறார்கள். இதன் விலை எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களது கணிப்பு. ஆனால், இது உண்மையா? சொத்தின் விலைகள் என்றென்றும் உயராது என்றும், அடிப்படைகள் பலவீனமடையும் போது மிகப்பெரிய பொருளாதார வளம் மிக்க நாடுகள் கூட ரியல் எஸ்டேட் சரிவுகளைக் கண்டுள்ளன என்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் ராஜ்தீப் சவுகான் எச்சரிக்கை விடுக்கிறார்.
“உங்கள் உறவினர் 2007-ல் ஒரு பிளாட் வாங்கினார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இன்னும் அதில் லாபம் அடைவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை” என்ற உதாரணத்துடன் தனது பதிவைத் தொடங்குகிறார் சௌஹான். அவர் சொல்ல வருவது இதுதான். சொத்து வாங்குவது எப்போதும் லாபத்தைத் தராது. இதிலுள்ள அபாயங்களை மக்கள் புறக்கணிக்கும்போது என்ன நடக்கும் என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.
1980-களின் பிற்பகுதியில் செழிப்பான ரியல் எஸ்டேட் சந்தையாக இருந்த ஜப்பான், வரலாற்றின் மிகப்பெரிய சரிவுகளில் ஒன்றாக எவ்வாறு முடிந்தது என்பதை சௌஹான் தனது பதிவில் பகிர்ந்து கொண்டார். “1989-ம் ஆண்டில், ஜப்பானின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்புமிக்கதாக இருந்தது. டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையின் கீழ் உள்ள நிலம் கலிபோர்னியா முழுவதையும் விட அதிகமான மதிப்புடையதாக இருந்தது. பின்னர் அது சரிந்தது. 2001 வாக்கில் அதன் நில மதிப்புகள் 70 சதவீதம் சரிந்தன. 1989-ல் உச்சத்தில் இருந்த போது அங்கு சொத்து வாங்கியவர்கள் இன்னும் படுகுழியில் உள்ளனர்” என்று அவர் லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட குடியிருப்பு நெருக்கடியையும் அவர் குறிப்பிட்டார். அங்கு 2007 மற்றும் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து விலைகள் 19 சதவீதம் சரிந்தன. “2009ஆம் ஆண்டில் மட்டும் 2.8 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வீட்டு உரிமையாளர்கள் தங்கள் முதலீடுகளை மீட்டெடுக்க ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை காத்திருந்தனர்” என்று அவர் கூறுகிறார்.
இதுபோன்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இந்தியா தற்போது ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஆதரிக்கும் வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்றும், நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, கட்டுப்படுத்தப்பட்ட ஊகம் மற்றும் சீரான விநியோக-தேவை போன்ற காரணிகள் தொடரும் வரை, இந்திய ரியல் எஸ்டேட் சந்தை வலுவாக இருக்கும் என்று சவுகான் குறிப்பிடுகிறார்.
“26 சதவீத அலுவலக காலியிடங்களுடன் சீனா எப்படி இருக்கிறது என்று கேளுங்கள். 1990 எப்படி இருந்தது என்று ஜப்பானிடம் கேளுங்கள். 2007-ல் வீடு வாங்கிய அமெரிக்கர்களிடம் கேளுங்கள். அடிப்படைகள் சீரமைக்கப்படும்போது, நீங்கள் நன்றாக லாபம் ஈட்டுகிறீர்கள். அவை சீரமைக்கப்படாதபோது, நீங்கள் மற்றவர்களுக்கு உதாரண கதையாகிவிடுவீர்கள்” என்கிறார் சவுகான்.
November 17, 2025 7:03 AM IST
சொத்து மதிப்பு எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையை விளக்கும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்!


