Last Updated:
மெட்ரோ ரயிலில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது, ’இயர்போன்’ இன்றி வீடியோ பார்ப்பது மற்றும் ஸ்பீக்கர் மோடில் பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது, செல்போனில் சத்தமாகப் பேசினாலோ அல்லது ’இயர்போன்’ இல்லாமல் பாட்டு கேட்டாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் செல்போனில் சத்தமாக பேசுவதாகவும், ’இயர்போன்’ இல்லாமல் பாட்டு கேட்பது, ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரொ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் பராமரிப்பு சட்டத்தின்படி சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது, ’இயர்போன்’ இன்றி வீடியோ பார்ப்பது மற்றும் ஸ்பீக்கர் மோடில் பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோருக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் மெட்ரோ வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பயணத்தின் போது அமைதியைக் கடைபிடிக்குமாறும், இயர்போன்களை பயன்படுத்துமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


