Last Updated:
ஆந்திராவில் ரங்கராயா மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவிகள் 50 பேருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில் ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ரங்கராயா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் பாரா மெடிக்கல் கல்லூரியும் இயங்கி வருகிறது. இதில், ஆந்திரா மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவ மாணவிகள் 50 பேருக்கு ஆய்வக உதவியாளர் கல்யாண் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதில், ஆய்வகத்துக்கு வரும் மாணவிகள் சிலரை, அவர்களுக்கு தெரியாமலேயே தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், தவறினால் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் எனவும் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் ஆய்வக உதவியாளர் கல்யாண் சக்கரவர்த்தி அத்துமீறலில் ஈடுபட்டது அம்பலமானதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார், ஆய்வக உதவியாளர் கல்யாண சக்கரவர்த்தியை கைது செய்து செய்தனர். அவருக்கு உறுதுணையாக ஆய்வகத்தில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஜிம்மி ராஜு, கோபாலகிருஷ்ணா மற்றும பிரசாத் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
பின்னர், அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய நான்கு ஊழியர்களையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 12, 2025 3:46 PM IST
செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்.. 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!