புதுடெல்லி,செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவை முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026’ நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டை டெல்லியில் இன்று (19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
‘அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். அதோடு, மாநாட்டில் கலந்து கொள்ளும் பல்வேறு உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.
மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பல்வேறு உயர்மட்ட தொழில்துறைத் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். பின்னர் அனைவரும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சிக்கு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளின் அரங்குகளை பார்வையிட உள்ளனர்.
அதைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதன் பிறகு, மாலை 5.30 மணிக்கு தலைமை நிர்வாக அதிகாரி வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.




