Last Updated:
சுந்தர் பிச்சை, டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, Google வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்; AI உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
டெல்லியில் நடைபெறும் செயற்கை தொழில்நுட்பம் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் 20ஆம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அனைவருக்குமான நலன், அனைவருக்குமான மகிழ்ச்சி என்ற தலைப்பில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த 30 சர்வதேச அமைப்புகள், மாநில மற்றும் மத்திய அரசின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
வரும் 20ஆம் தேதி இந்த மாநாட்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உரையாற்ற உள்ளார். அதை முன்னிட்டு இந்தியா வந்த சுந்தர் பிச்சை, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் மனித குல பயன்பாட்டுக்கு ஏற்ப அதனை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏஐ துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் பற்றியும், இந்திய மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்க உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.


