யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட மருத்துவ அதிகாரியின் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக குறித்த வழக்கு இன்று (12) எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மனித புதைகுழி வளாகத்தை நேரில் சென்று நீதவான் உள்ளிட்ட குழுவினர் இன்று ஆய்வு செய்ததன் பின்னர், அகழ்வு பணிக்கான திகதி அறிவிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட என்புக்கூட்டு எச்சங்கள்
கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது, சீரான வானிலை நிலவுவதால், சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிறுவர்களின் புத்தகப்பை, பொம்மைகள், ஆடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

