Last Updated:
செப்டம்பர் 1 முதல், பதிவு தபால் சேவை விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படும். இதனால், பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படும். சு.வெங்கடேசன் இதை விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், விரைவு தபால் சேவையுடன் பதிவு தபால் சேவை ஒன்றிணைக்கப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
தபால் துறையில் கடந்த 1898 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட REGISTERED POST எனப்படும் பதிவு தபால் சேவை 128 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நீதிமன்றம், வங்கி, அரசு துறை சார்ந்த கடிதங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான முறையில் பதிவு தபால் மூலம் அனுப்பபப்பட்டு வருகின்றன,
இந்நிலையில், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், பதிவு தபால் சேவை, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படும் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுகிறது. தபால் சேவைகளை நெறிப்படுத்துதல், கண்காணிப்பை மேம்படுத்துதல், சேவைகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக அஞ்சல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பதிவு தபால் சேவையில் குறைந்தபட்ச கட்டணம் 26 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், விரைவுத் தபாலில் 41 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பதிவுத் தபாலில் எடை கூடினால் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், விரைவு தபாலில், எடை மற்றும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் அதிகரிக்கப்படுவதால், அஞ்சல் துறையின் இந்த நடவடிக்கை, மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளும் முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளார்.
July 31, 2025 12:33 PM IST
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவு தபால் சேவை ரத்து – அஞ்சல் துறையின் முடிவிற்கு எம்.பி சு.வெங்கடேஷன் எதிர்ப்பு