சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டம்: தொடக்கப்புள்ளி வச்சாச்சு..!! விரைவில் பணிகள் தொடக்கம்..!!
ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை போல இந்தியாவிலும் பிரதான நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புல்லட் ரயில் திட்டங்களை அறிவித்து வருகிறது.
நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டமான மும்பை அகமதாபாத் ரயில் பாதை பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இது அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சென்னை , பெங்களூரு இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு அனுமதி தந்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சென்னை- பெங்களூருஇடையே 73 நிமிடங்களிலும் பயணிக்க முடியும் என மத்திய அரசு கூறுகிறது.

சென்னை- பெங்களூரு புல்லட் ரயில் சென்னை சென்டிரலில் தொடங்கி பூந்தமல்லி, பரந்தூர், சித்தூர், கோலார் வழியாக பெங்களூருவின் பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைய இருக்கிறது. இதில் பெங்களூரு நகரில் ஒயிட்பீல்டு முதல் பையப்பனஹள்ளி வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் மூலம் மக்களின் பயண அனுபவம் மேம்படும் மற்றும் இந்த இரு நகரங்களிலும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெங்களூரு ஐடி நகரமாகவும் சென்னை உற்பத்தி நகரமாகவும் இருப்பதால் இந்த புல்லட் ரயில் திட்டம் இரு நகரங்களின் வளர்ச்சியை இன்னும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் மணிக்கு 320 முதல் 350 கி.மீ வரையிலான வேகத்தில் இயங்கக்கூடியவகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 306 கி,மீ நீளத்துக்கு புல்லட் ரயில் செல்வதற்கான ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) புல்லட் ரயில் திட்டத்தில் சென்னை – பெங்களூரு வழித்தடத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்கான வடிவமைப்பு, சுரங்கப்பாதை, ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரி இருக்கிறது. சென்னை, பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கும் ரயில் நிலையங்களுக்கான வடிவமைப்புகளை வழங்க இந்த ஒப்பந்த புள்ளியின் மூலம் நிறுவனம் தேர்வு செய்யப்படும். இந்த நிறுவனம் ஆய்வு செய்து வடிவமைப்பினை வழங்கும். இதன் அடிப்படையில் தான் கட்டுமான பணிகள் தொடங்கும்.
மும்பை – அகமதாபாத்தை தொடர்ந்து NHSRCL அமைப்பு சென்னை – பெங்களூரு இடையிலான புல்லட் ரயில் திட்ட பணிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டம் வந்துவிட்டால் சென்னை மக்கள் பெங்களூருவுக்கும் , பெங்களூரு மக்கள் சென்னைக்கும் வந்து செல்ல விமான சேவையே தேவைப்படாது. ஏனெனில் அந்த நேரத்திற்குள் புல்லட் ரயிலேலே பயணம் செய்து விடலாம்.

