சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. கொட்டும் மழையிலும் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கடைவீதிகளில் படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் நேற்றும் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தடைகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.
பாதுகாப்பு பணியில் சுமார் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் உயர் கோபுரங்களை அமைத்து கண்காணித்ததுடன் ஒலி பெருக்கியில் தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு பொது மக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர். சாதரண உடையிலும் மக்கள் கூட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிமாக இருந்தது. அப்பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை அனல் பறந்தது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையிலும், துணிக் கடைகளுக்கு வந்த மக்கள் ரம்மியமான குளிர்ந்த சூழலை ரசித்தபடி பொருட்களை வாங்கினர்.

புத்தாடைகளை வாங்கிய பின் அனைவரும் அசைவ உணவகங்களை நோக்கிச் சென்றதால், உணவகங்களிலும் இனிப்பகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. நீண்ட நேரம் காத்திருந்தே உணவருந்தும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலை, புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, பூந்தமல்லி கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
புறநகரை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், ஒரு தெருவை கடக்கவே சில மணி நேரம் ஆனது. அதேபோல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.
புறநகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஒரேநேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால் சென்னை மார்க்கமான ஜிஎஸ்டி, சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் வரை வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.