சென்னை கூவம் ஆற்றில் ரத்தக் காயங்களுடன் இளைஞர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், பவன் கல்யாண் கட்சி நிர்வாகிகள் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சியினருக்கு ஸ்பையாகச் செயல்பட்ட உதவியாளரை, குடோனில் கட்டி வைத்து அடித்துச் சித்ரவதை செய்த சம்பவத்தில் நடந்தது என்ன?
சென்னை கூவம் ஆற்றங்கரையோரம், கடந்த 8ஆம் தேதி உடலில் ரத்தக் காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக உயிரிழந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக ஏழுகிணறு போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அதில் இறந்து கிடந்த நபர், திருப்பதியைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீனிவாசலு என்பதும், இறப்பதற்கு முன் பல நாட்களாக அடித்து சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் உடலில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆந்திராவில் கொன்று உடலைக் கூவம் ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றிருப்பார்களா? என்ற சந்தேகத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்த பகீர் சிசிடிவி காட்சி ஒன்று சிக்கியது. அதில் ஆந்திர பதிவெண் கொண்ட காரில் வந்த ஒரு கும்பல், ஸ்ரீனிவாசலு உடலைக் கூவம் ஆற்றங்கரையில் தூக்கி வீசிச் சென்றது பதிவாகி இருந்தது. கார் பதிவு எண்ணை வைத்து தேடியதில் அது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா என்பவருடையது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீனிவாசலு மரணத்தில் விணுதா கோட்டாவுக்கும் அவரது கணவரான ஜனசேனா கட்சியின் ஐ.டி. விங் நிர்வாகி சிவக்குமாருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், ஆந்திர அரசியலே அதிர்ந்து போகும் பல திடுக்கிடும் சம்பவங்கள் அடுத்தடுத்து அம்பலமாயின.
விணுதா கோட்டா படுக்கையறையில் உடை மாற்றும் போது கட்டிலுக்கு அடியில் செல்போன் ஒன்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அது விணுதா வீட்டில் 2019 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்த, சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீனிவாசலுவுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. செல்போனை சோதனை செய்து பார்த்தபோது அதில் விணுதா கோட்டா உடை மாற்றும் காட்சி பதிவாகி இருந்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து விணுதா கோட்டா மற்றும் அவரது கணவர் சந்திரபாபு இருவரும் ஸ்ரீனிவாசலுவை அடித்து விசாரித்துள்ளனர். அதில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தனக்குப் பணம் கொடுத்து, விணுதா கோட்டாவின் ரகசியம் மற்றும் செயல்பாடுகளைக் கூற தன்னை ஸ்பையாகப் பயன்படுத்தியதாக ஸ்ரீனிவாசலு கூறியதாகத் தெரிகிறது. தன்னிடம் வேலை பார்த்துக்கொண்டே தனக்குத் துரோகம் செய்ததாக, ஆத்திரம் அடைந்த விணுதா, ஸ்ரீனிவாசலுவை குடோனில் அடைத்து அடித்துச் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி கழிவறைக்குச் சென்றுவிட்டு ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் கதவை உடைத்துப் பார்த்தபோது ஸ்ரீனிவாசலு தனக்குத் தானே கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விணுதா கூறியுள்ளார். அதில் பயந்துபோன விணுதாவும், அவரது கணவர் சந்திரபாபுவும், உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநர் உதவியுடன் ஸ்ரீனிவாசலு உடலைக் காரில் ஏற்றி கூவம் ஆற்றுக் கரையோரமாக வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து, ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, உதவியாளர் கோபி மற்றும் கார் ஓட்டுநர் ஷேக் தாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அடி தாங்க முடியாமல் ஸ்ரீனிவாசலு தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அடித்தே கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், அது தொடர்பாகத் தொடர் விசாரணை நீடித்து வருகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 13, 2025 8:31 AM IST
சென்னை கூவத்தில் பவன் கல்யாண் கட்சி நிர்வாகி சடலம்.. ஆந்திராவை அலறவிட்ட கொடூரச் சம்பவம்.. நடந்தது என்ன?

