அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அந்த அணியில் இருந்து விலகி சென்னை அணியில் இணைவார் என்று தகவல்கள் பரவி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இருந்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார் ரிஷப் பந்த். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை ரிஷப் பந்த் சிறப்பாக வழி நடத்தினார்.
மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 7 போட்டிகளில் தோல்வியும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்றது. இந்த தொடரில் டெல்லி அணி 6-ஆவது இடத்தை பிடித்தது. முக்கியமான ஆட்டக்காரர்கள் அணியில் இல்லாத சூழலில் டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தியதாக ரிஷப் பந்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலும் ரிஷப் பந்த் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் டெல்லி அணி நிர்வாகத்துடன் ரிஷப் பந்துக்கு கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால் அவர் அடுத்து வரவுள்ள ஐபிஎல் ஏலம் மூலமாக சென்னை அணிக்கு மாறுவார் என்றும் பிரபல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். தற்போது ருதுராஜ் சென்னை அணியை வழிநடத்தி வரும் நிலையில், ஒருவேளை ரிஷப் பந்த் அணியில் இணைந்தால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தோனிக்கு மிகவும் நெருக்கமானவர் ரிஷப் பந்த் என்பது கவனிக்கத்தக்கது.
இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல். ராகுலும் அந்த அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தின் போது லக்னோ அணி படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலை மைதானத்திலேயே கடுமையாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது கே.எல். ராகுலை லக்னோ அணி 17 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)