மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்றைய வர்த்தக தொடக்கத்தில் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால், படிப்படியாக பங்கு மதிப்புகள் சரிய ஆரம்பித்தன. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 906 புள்ளிகள் குறைந்து 72,761.89 ஆகவும், நிஃப்டி 338 புள்ளிகள் குறைந்து 21,997.70 ஆகவும் சரிந்தது. சதவீத அளவில் சென்செக்ஸ் 1.23%, நிஃப்டி 1.51% சரிவைக் கண்டன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 4.2 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 5.11 சதவீதமும் சரிந்தன. மொத்தமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குகள் சற்று ஏற்றம்: அதிகபட்சமாக, பவர் கிரிட் (7.31%), கோல் இந்தியா (7.18%), அதானி போர்ட்ஸ் (7.05%), அதானி எண்டர்பிரைசஸ் (6.96%), என்டிபிசி (6.45%), டாடா ஸ்டீல் (5.80%), ஓஎன்ஜிசி (5.57%) சரிவைக் கண்டன. அதே சமயம் அதிகபட்சமாக ஐடிசி 4.45% ஏற்றம் கண்டது. ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா, சிப்லா, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்றது, நேற்றைய சரிவுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்தச் சூழல்அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறியீடு அதிகரிப்பு: அமெரிக்காவில் கடந்த பிப்ரவரிமாதத்துக்கான நுகர்வு விலை குறியீடுஅதிகரித்துள்ளது. இது பணவீக்கம் தொடர்வதை உணர்த்தும் நிலையில், அது பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு வேகமாக அதிகரித்துவருவது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் செபி கடந்த மாதம் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு அறிவு றுத்தியது குறிப்பிடத்தக்கது.