கோலாலம்பூர், பிப்ரவரி 10, 2026:
செந்தூல், ஜாலான் செந்தூல் சாலையில் உள்ள ஒரு பள்ளிக்கு முன்பாக, சுமார் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜாலான் செந்தூல் சாலையில் உள்ள ‘மெத்தடிஸ்ட் செந்துல்’ (SMK L Methodist Sentul) ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்பாக இப்பெண் சடலமாக கிடந்தார்.
நேற்று (பிப்ரவரி 9) காலை 7:20 மணியளவில், அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர் என்று, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் அகமட் சுகர்னோ முகமட் ஜஹாரி கூறினார்.
பெண்ணின் வலது பக்கக் காதுக்கு மேலே 4 செமீ நீளமுள்ள ஆழமான வெட்டுக்காயமும், கண் இமைகளில் வீக்கமும் இருந்தன. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக 46 வயதுடைய வேலையற்ற உள்ளூர் நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, அந்த நபர் மரக்கட்டை ஒன்றால் பெண்ணின் தலையில் தாக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என்றும், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கைதான நபரைத் தடுத்து வைத்து விசாரிக்க (Remand) நீதிமன்ற அனுமதி இன்று கோரப்படும் என்றும் அவர் சொன்னார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் வீடற்ற பெண்ணாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள் உடனடியாகச் செந்துல் போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் (கொலை) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.




