Last Updated:
செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முன் பாஜக முன்னாள் தலைவர், அதிமுக செயலாளர் ஆகியோர் பனையூரில் தவெகவில் அதிகாரபூர்வமாக இணைகின்றனர்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரும், முன்னாள் பாஜக தலைவர் ஒருவரும் தவெகவில் நாளை இணைகின்றனர்.
தவெக தலைவர் கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை சமீபத்தில் நடத்தி முடித்தார். இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி புதுச்சேரியில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக தரப்பில் டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக மாலை 5 மணி வரை ரோடுஷோ செல்ல பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. இதில் உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் விஜய் உரையாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஒரு பக்கம் பேசப்பட்டு வரும் சூழலில், இன்று தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெகவில் இணைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசிய செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு, பின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்ற பேச்சு எழுந்துவந்தநிலையில், இன்று காலை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாலை தவெக தலைவர் விஜய்யை சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன் தவெகவில் இணையும் நிகழ்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முன்னதாக, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரும், முன்னாள் பாஜக தலைவர் ஒருவரும் தவெகவில் காலை 9 மணிக்கு இணைவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் அதிமுக செயலாளர் அசானா ஆகிய இருவரும் தவெகவில் அதிகாரபூர்வமாக இணையவதற்கு தவெகவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் நாளை காலை 9 மணிக்கு பனையூர் தவெக அலுவலகத்தில் தவெகவில் இணைகிறார்கள்.
November 26, 2025 9:00 PM IST


