International
oi-Hema Vandhana
துபாய்: பெட்ரோல், டீசல் விலை ஏறுமா, இறங்குமா என்று நாம் தினமும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த பெட்ரோல் நம்மிடம் வந்து சேர்வது சாதாரண விஷயமில்லை.. கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பல நாடுகளுக்கு செல்கின்றன. இப்போது அந்த கப்பல்கள் செல்லும் முக்கியமான 2 பாதைகளில்தான் பிரச்சனை உருவாகியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலால் ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஹார்மூஸ் ஏன் முக்கியம் என்றால், உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெயில் பெருமளவு, இந்த பகுதி வழியாகத்தான் செல்கிறது. அந்த ரூட்டில் பிரச்சனை என்றால், எண்ணெய் கப்பல்கள் வழக்கம்போல் செல்ல முடியாது.

ஹார்முஸ் நீரிணை
இதனால் கப்பல்கள் வேறு பாதையைத் தேட வேண்டிய நிலை வருகிறது. அப்படி சுற்றிச்சென்றால் நேரம் அதிகமாகும்… கப்பல் செலவும் அதிகமாகும்.. அத்துடன் காப்பீட்டு செலவும் அதிகரிக்கும். கடைசியில் எண்ணெயை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கொண்டு வருவதற்கான செலவு கூடுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இதே பிரச்சனைக்கு இன்னொரு முக்கியமான கடல் பாதையும் சிக்கலாகியுள்ளது… ஏமனில் செயல்படும் ஹவுதி படைகள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வருகின்றன. அவர்கள் மொகா நகரம் மற்றும் பெரிம் தீவு பகுதிகளில் முன்னேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன… பெரிம் தீவு இருக்கும் பகுதி செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தப் நீரிணைக்கு அருகில் உள்ளது.
உலக எண்ணெய் வர்த்தகம்
இந்த பெயர் நமக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் உலக எண்ணெய் வர்த்தகத்துக்கு இது மிகவும் முக்கியமான பாதை… எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.. அதாவது உலக கப்பல் போக்குவரத்தில் சுமார் 10 சதவீதம் இந்தப் பகுதியில்தான் நடக்கிறதாம்..
ஒரு முக்கிய எண்ணெய் பாதையில் ஏற்கெனவே பிரச்சனை உள்ளபோது, இப்போது இன்னொரு முக்கிய பாதையிலும் பிரச்சனை கிளம்பி உள்ளது..
விஷயம் இத்துடன் முடியவில்லை.. சவுதி அரேபியாவிடம் எண்ணெய்யை கொண்டு செல்ல உதவும் East-West என்ற குழாய் உள்ளது. ஹார்முஸ் பாதையில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த குழாய் மூலம் எண்ணெயை செங்கடல் பக்கம் கொண்டு செல்ல முடியும். ஆனால் இந்த குழாயும் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சவுதி அந்த குழாயை தற்காலிகமாக மூடியுள்ளது.
கச்சா விலை உயர்வு
அந்தவகையில், எண்ணெய்யை எடுத்துச் செல்லும் வழிகளில் ஒன்றன்பின் ஒன்றாக சிக்கல் வந்து கொண்டிருக்கிறது… இந்த தாக்கம் ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலையிலும் தெரிகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை கடந்துள்ளது.
இது இந்தியாவுக்கும் கவலையை தந்துள்ளது.. ஏனென்றால் இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்துதான் வாங்குகிறது. அந்த எண்ணெயை வாங்குவதற்கான விலை அதிகரித்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும்.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயருமா
அதற்காக உடனே பெட்ரோல் விலை உயர்ந்துவிடுமா என்றால், அப்படி உறுதியாக சொல்ல முடியாது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பல காரணிகளை வைத்து எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் மத்திய கிழக்கு பிரச்சனை நீடித்தால் என்ன ஆகும் என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வி.
எண்ணெய் கப்பல்கள் தொடர்ந்து மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், போக்குவரத்து செலவு அதிகரிக்கும்… கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்தால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை மீது அழுத்தம் வரலாம்.
அதனால் இப்போது நடப்பது வெறும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை மட்டும் இல்லை. அங்கே எண்ணெய் செல்லும் பாதையில் ஏற்படும் ஒவ்வொரு தடையும், கடைசியில் நம்முடைய பெட்ரோல் விலையையும் பாதிக்கக்கூடிய விஷயமாக மாறலாம். எனவேதான் உலக நாடுகள் இப்போது இந்த 2 கடல் பாதைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன..!!!



