
Last Updated:
பார்க்கர் விண்கலத்தின் வெப்பம் ஆயிரத்து 800 டிகிரி பாரன்ஹீட்டை அடைந்தாலும், விண்கலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
சூரியனிடம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக நெருக்கமாக சென்று, அதனை வெற்றிகரமாக கடந்து, நாசாவின் பார்க்கர் விண்கலம் சாதனை படைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, பார்க்கர் என்ற விண்கலத்தை ஏவியது. இது, 21 முறை சூரியனை நெருங்கி சுற்றி வந்தாலும், கடந்த கிறிஸ்துமஸ் அன்று, இதுவரை இல்லாத அளவிற்கு பூமியில் இருந்து 61 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று சூரியனை நெருங்கியது. அதாவது, பூமியையும் சூரியனையும் 100 சென்டி மீட்டர் இடைவெளியில் வைத்தால், பார்க்கர் விண்கலம், சூரியனிடம் 4 சென்டி மீட்டர் தொலைவு வரை நெருங்கியதாக புரிந்துகொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரியனை நெருங்கும்போது, பார்க்கர் விண்கலத்தின் வெப்பம் ஆயிரத்து 800 டிகிரி பாரன்ஹீட்டை அடைந்தாலும், விண்கலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும், சூரியனை ஒரு மணிநேரத்தில் சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பார்க்கர் விண்கலம் கடந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 30 விநாடிக்குள் செல்லும் நேரத்திற்கு இது சமமாகும். அதீத வெப்பம் காரணமாக, பார்க்கர் விண்கலத்தில் இருந்து பெறப்படும் தகவல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், அது சூரியனை வெற்றிகரமாக கடந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
December 28, 2024 3:10 PM IST

