திருப்பூர்: வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் நடைபெறும் உற்பத்தியை ஆவணப்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ஃபுளூசைன் டெக்னாலஜி’ நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்திய அளவில் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப் படுவதை ஆவணப் படுத்தி உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் வாயிலாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஃபுளூசைன் டெக்னாலஜி நிறுவனத்துடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் சுவிட்சர்லாந்தின் ஃப்ளூசைன் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி டேனியல் ரப்பனாச் மற்றும் இந்திய துணை கண்டத்துக்கான இயக்குநர் காத்தரீனா மேயர் பங்கேற்று, தங்களது நிறுவனத்தின் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் நடைபெறும் உற்பத்தியை எவ்வாறு ஆவணப் படுத்துகிறது என்பதை காணொலி வாயிலாக விளக்கி கூறினார்கள்.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் ஏ.சக்திவேல் பேசும் போது, “உலக அளவில் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டை பின்பற்றுவதில் திருப்பூர் முன்னணியில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான ஆயத்த பணிகளை திருப்பூர் தொழில்துறை முன்னெடுத்து வருகிறது. 2030-ம் ஆண்டு அமலுக்கு வரக்கூடிய ஐரோப்பிய சட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய, திருப்பூர் நிறுவனங்களை தயார் செய்வதே தலையாய பணி. அதில் ஒன்று தான் இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம். வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ், உற்பத்தி நிலையில் இருக்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பயன்பெறும் இந்த தளத்தில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்’’ என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, “வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தியை மேற்கொள்வதற்கான அனைத்து விழிப்புணர்வுகளையும் தொழில் சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. மேலும், பூஜ்ஜிய முறை சுத்திகரிப்பு, மரபு சாரா மின் உற்பத்தி, மரக் கன்றுகள் நடுதல், குளம் குட்டைகளை தூர்வாரி செப்பனிடுதல், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்தல், அரசுடன் இணைந்து சாலை வசதி, புற்று நோய் மருத்துவமனை, டயாலிசிஸ் சென்டர், மழைநீர் சேகரிப்பு, மருத்துவ முகாம்கள், பெண்களுக்கு அதிக பணி வாய்ப்பு ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது’’ என்றார்.
இதில் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், திறன் மேம்பாட்டு கழகத்தின் மூத்த இயக்குநர் ஸ்மிரிதி திவேதி பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் என்.திருக்குமரன், துணைத் தலைவர் வி.இளங்கோவன், பொருளாளர் ஆர்.கோபால கிருஷ்ணன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.