Last Updated:
இம்மாற்றங்களைச் சமூக-பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விளக்குகிறார் அமெரிக்கன் கல்லூரியின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் முத்துராஜ்.
கடந்த 25 ஆண்டுகளாகத் தங்கம் ஒரு அசைக்க முடியாத பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து வருகிறது. 2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை 90% ஆக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் ரூ. 24,500 (13.5%) அளவு சரிந்தது. இந்த மிகக்கடுமையான சரிவால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,56,200 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (பிப்ரவரி 16, திங்கட்கிழமை), சந்தை தொடங்கிய போதே தங்கம் மேலும் சரிவுடன் காணப்பட்டது. இன்றைய நிலவரப்படி, MCX சந்தையில் தங்கம் 0.61% சரிந்து, 10 கிராம் ரூ. 1,54,937 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இம்மாற்றங்களைச் சமூக-பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விளக்குகிறார் அமெரிக்கன் கல்லூரியின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் முத்துராஜ்.
தற்காலிக விலை வீழ்ச்சி நிலவினாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவித்த அவர், இந்திய சமூக அமைப்பில் தங்கம் ஒரு சாதாரண முதலீட்டு பொருளாக மட்டுமல்லாமல், குடும்ப மரபுகளோடும், சமூக கட்டமைப்புகளோடும், கலாச்சார அடையாளங்களோடும் பின்னிப் பிணைந்த ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் இதன் தேவை எப்போதும் நிலையாக உள்ளதாக தெரிவித்தார். தேசத்தின் 45% நகைகள் தமிழ்நாட்டு பெண்களிடம் இருப்பதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு இல்லங்களில் மட்டும் தற்போது 6720 டன் தங்கம் முடங்கி உள்ளது. இது, அமெரிக்காவின் தேசிய தங்க கையிருப்பை விட அதிகமாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச பொருளாதார கட்டமைப்பில் காணப்படும் நிச்சயமற்றத்தன்மை, புவிசார் அரசியல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்தை அடமானமாகக் கொண்டு கடன் வழங்குவதில் (Gold Loan) காட்டும் ஆர்வம் ஆகியவை தங்கத்தை நிதி அமைப்பின் மையப் புள்ளியாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நீண்ட காலமாக சரிந்து வருவதால், பணத்தின் வாங்கும் சக்தி குறைவதாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நம்பிக்கையிழப்பு தான் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. பணத்தை வைத்திருப்பதை விட மதிப்பு குறையாத சொத்தில் மாற்ற வேண்டும் என்ற எண்ணம், தங்கத்தின் தேவை தொடர்ந்து உயர்வதற்குக் காரணமாவதாக முத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் எளிதாகக் கண்டறியப்பட்டு, குறைந்த செலவில் வெட்டியெடுக்கக்கூடிய தங்கச் சுரங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அதன் விலை உயர்வுக்கு மற்றொரு முக்கியக் காரணமாக தெரிவித்தார். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “வரும் 20 முதல் 30 ஆண்டுகளில் புதிய மற்றும் தரமான தங்க வளங்களைக் கண்டறிந்து சந்தைக்குக் கொண்டு வருவது பெரும் சவாலாக மாறும் என்றும் தெரிவித்தார். தங்கத்தின் வரத்து (Supply) குறையும் என்ற கணிப்பே அதன் தேவையை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
சுரங்கங்கள் காலி? டாலரின் ஆதிக்கம்… எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும்? பேராசிரியர் முத்துராஜ் விளக்கம்

