Last Updated:
விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற திறமை மிக்க வீரர்கள் பாகிஸ்தானில் கிடையாது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், அந்த அணி வீரர்களை முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தோல்வி குறித்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளருமான சோயப் அக்தர் கூறியதாவது:
நவீன கிரிக்கெட்டின் படி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதில்லை. நாட்டிற்காக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. பல நாடுகள் 6 பவுலர்களுடன் விளையாடுகிறது. ஆனால் பாகிஸ்தான் மட்டும் நான்கு பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இது ஒரு முட்டாள்தனம்.
விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற திறமை மிக்க வீரர்கள் பாகிஸ்தானில் கிடையாது. பாபர் அசாம் அணிக்காக விளையாடுவது கிடையாது. அவர் சுயநலத்துக்காக விளையாடுகிறார். அணி வெற்றி பெறுவதில் அவர் கவனம் செலுத்தாமல் தனிப்பட்ட ரன்கள் மற்றும் சராசரிக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார். சோயப் அக்தரின் இந்த கடுமையான விமர்சனம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
August 14, 2025 2:35 PM IST


