Last Updated:
இன்றைய காலக்கட்டத்தில் இது மிகச்சிறிய தொகையாகத் தோன்றினாலும், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்தியாவை மறுகட்டமைப்பு செய்ய இதுவே அடித்தளமாக அமைந்தது
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது பலரும் அறிந்திடாத தகவலாக உள்ளது.
இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, 1947 நவம்பர் 26 அன்று நாட்டின் முதல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆர். கே. சண்முகம் செட்டி ஆவார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்ற இவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் வழக்கறிஞராகத் திகழ்ந்தார். இவர் தாக்கல் செய்தது முழுமையான பட்ஜெட் அல்ல, அது ஒரு இடைக்கால பட்ஜெட் ஆகும். ஆகஸ்ட் 15, 1947 முதல் மார்ச் 31, 1948 வரையிலான சுமார் ஏழரை மாத காலத்திற்கான நிதித் திட்டங்களை இது உள்ளடக்கியிருந்தது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டின் மொத்த மதிப்பு வெறும் 197.29 கோடி ரூபாய் மட்டுமே. இன்றைய காலக்கட்டத்தில் இது மிகச்சிறிய தொகையாகத் தோன்றினாலும், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்தியாவை மறுகட்டமைப்பு செய்ய இதுவே அடித்தளமாக அமைந்தது.
அந்த பட்ஜெட்டில் சுமார் 46 சதவீதத் தொகை, அதாவது 92.74 கோடி ரூபாய் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கப்பட்டது. தேசப் பிரிவினையால் ஏற்பட்ட குழப்பங்கள், எல்லையில் நிலவிய பதற்றம் மற்றும் அகதிகளின் மறுவாழ்வுப் பணிகள் போன்ற சவால்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது.
மேலும், நாட்டில் நிலவிய கடுமையான உணவுப் பற்றாக்குறையைப் போக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஆர். கே. சண்முகம் செட்டி வெறும் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்று உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி ஆணையம் (IMF) உருவாவதற்கும் முக்கிய பங்காற்றியவர் என்பது கவனிக்கத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்.. தொகை எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?


